பக்கங்கள் (Pages)

சனி, 4 ஆகஸ்ட், 2012

மனசே ரிலாக்ஸ்....

உங்களுக்கு பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் நீங்கள் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்களானால் உங்களுக்கு மிகுந்த மன அமைதி கிட்டும்.
  • நீங்கள் உடலளவில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தாலும் மனதை வெறுமையாக வைத்திருக்காதீர்கள்.
  • நீங்கள் எதைஎல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறீர்களோ அந்த எல்லாக்காரியங்களையும் செய்யாமல் நிறுத்துங்கள். அதைப்போல் நீங்கள் செய்யவேண்டும் என்று நினைக்கும் காரியங்களை உடனே தொடங்குவதும் அதுபோல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்
  • எல்லாவிதத் தூண்டுதல்களிலிருந்தும் விலகி இருங்கள்.தூண்டுதல்கள் உண்டாக்கும் இடத்திற்கு செல்லாதீர்கள்.தூண்டுதல்களை தவிர்க்க போராடவேண்டியதிருக்கும்.
  • பிறரது மன அமைதியைக்குலைக்கும் ஒருவனுக்கு,மன அமைதியை பெற விழைவதற்கும்தகுதி கிடையாது.
  • எதிலும் எவருக்கும் புத்திமதி சொல்ல போகாதீர்கள்,நீங்கள் கேட்கப்பட்டாலன்றி,உங்கள் வேலையைப்பாருங்கள்.
  • எப்பொழுதும் அடக்கமாக இருங்கள், மற்றும் தற்காலிகமாக கவலையை மறைக்கும் மகிழ்ச்சியைவிட அடக்கம் மேலானது

மன அமைதியின்மையால்
மனதை அமைதியாக வைத்திருப்பது என்பது கடினமான காரியம்தான். ஆனால் ஒருவர் தனது மனதை அமைதியாக வைத்திருப்பது மிக மிக அவசியமாகும்.

மனம் அமைதியாக இல்லாவிட்டால் எந்த வேலையிலும் ஈடுபட முடியாது. எந்த வேலையையும் முழுமையாகச் செய்ய முடியாது.

திடீர் திடீர் என்று கோபம் வரும் – மிக நெருங்கியவர்கள் மீது அந்தக் கோபத்தைவிட வேண்டிவரும். அதனால் அருகில் நெருக்கமாக உள்ளவர்கள் எல்லாம் பகைவர்களாக மாறுவார்கள்.

மன அமைதி இல்லாதபோது அறிவு தடுமாறும். எந்த முடிவையும் சரியாக எடுக்க முடியாது. முடிவு எடுத்தாலும் தவறானதாகவே முடிந்து விடும்.
மன அமைதி இன்மையால் உறக்கம் வராது. பலர் தூக்க மாத்திரை போட்டுக் கொண்டு உறங்குவதற்கு மன அமைதி இன்மையே காரணமாகும்.

மன அமைதி இன்மை உறக்கத்தைக் கெடுப்பதோடு உடல் நலனையும கெடுக்கும். குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எந்த நோயும் உடம்பில் இருக்காது, ஆனால் உடல் நலமாக இருக்காது.

மன அமைதி இல்லாதவர்கள் மனம் விட்டு சிரிக்கவும் முடியாது. எப்போதும் முகம் இருளடைந்தே இருக்கும். அதனால் மன அமைதியின் இன்றியமையாமையைப் புறக்கணிக்காமல் எச்சரிக்கையாக இருந்து அமைதியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

மன அமைதி கெடக் காரணங்கள்
இரண்டு வகையில் மன அமைதி கெடுகின்றது. ஒன்று ஒருவன் தனது எண்ணங்களால், பேச்சால், செயல்பாடுகளால் மன அமைதியை இழந்து விடுதல்.

இரண்டு மற்றவர்களால், மன அமைதி இழத்தல். ஆக நம்மாலும் மற்றவர்களாலும் இந்த இரண்டு வகையாலும் மன அமைதி கெடுகின்றது.

தன் செயல்
ஒரு சிலர் தாங்கள் அறியாது, ஆராயாது, ஆசை காரணமாகச் செய்கின்ற செயல்களின் விளைவினால் மன அமைதியை இழக்கிறார்கள். இவர்கள் தங்கள்தவறுகளைப் புறக்கணித்த போதும் மனசாட்சி இடைவிடாது உறுத்திக்கொண்டே இருக்கும். அதனால் மன அமைதியை இழப்பர்.

யாரையேனும் கடுமையாகப்பேசிவிட்டு வருந்துதல்; தனக்கு இருக்கும் செல்வாக்கால் வரம்பு மீறிய செயல்களைச் செய்து விட்டு வருந்துதல், இவைகள் எல்லாம் மன அமைதியை கெடுத்து விடுகின்றன.

சிலர் வீண் செலவு செய்து விட்டு வருந்துதல், நேரத்தை வீண்டித்துவிட்டு வருந்ததல் இதுபோன்ற செயல்களால் அமைதியை இழந்து தவிப்பதும் உண்டு.

பிறரால் மன அமைதி கெடுதல்
பலர் மன அமைதியை இழப்பதற்கு அவர்களோடுதொடர்புடையவர்கள் காரணமாக இருப்பார்கள். மன உறுதி இல்லாதவர்கள் பிறரால் மன அமைதி கெடுவதே அதிகமாகும். குடும்பத்தில் இருந்தே இந்தச் சிக்கல்கள் தொடங்குகின்றன. குழந்தைகள் சரியாகப் படிக்கவில்லை, வீட்டில் உள்ளவர்கள் சொன்னபடி கேட்கவில்லை, குடும்பத்தில் அளவிற்கு மீறிய செலவினங்கள் – இப்படி ஏதேனும் ஒரு காரணம் பெற்றோரின் மன அமைதிக்குப் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன.

சிலர் தம் தாட்சண்யம், கருணை காரணமாகவே மன அமைதியை இழந்து விடுகிறார்கள். பாவம் என்று வேலை தெரியாதவனை ஒரு வேலைக்கு வைத்துக்கொள்ளுதல், பாவம் என்று உதவி செய்துவிட்டு அது திரும்ப வராதபோது மன அமைதியை இழத்தல் – அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் கொடுத்து விட்டு அதனை வசூல் செய்யாதபோது மன அமைதி இழந்து விடுதல் – ஒருவரை நம்பி மோசம் போனபோது மன அமைதியை இழத்தல் – இப்படிச் சிலர் மன அமைதியை இழந்து விடுகின்றனர்.

தொழில் செய்யும் இடத்தில் தேவையில்லாததைப் பேசி அதனால் ஏற்படும் துன்பத்தால் மன அமைதியை இழப்பவர்கள் உண்டு. அவசரப்பட்டு ஏதோ சொல்வதும் சில செயல்களைச் செய்வதாலும் விளைவு வேறாக வரும்போது மன அமைதி போய்விடுகிறது.

வீட்டில் அமைதி இல்லாதவர்களால் தொழில் செய்யும் இடத்தில் அமைதியாக இருக்க முடியாது. தொழில் செய்யும் இடத்தில் அமைதியை இழந்தவர்கள் வீட்டில் அமைதியைக் கெடுத்து விடுவார்கள்.

எல்லோரும் இழந்த அமைதியை மீண்டும் தேடி அலைகிறார்கள் என்பதுதான் உண்மை. அமைதி என்பது வெளியில் இல்லை. அது நம்முள்ளேதான் இருக்கிறது. அதைக் கண்டறிந்து நாம்தான் பாதுகாக்க வேண்டும்; வளர்த்துக் கொள்ள வேண்டும்.

காரணம் கண்டறியுங்கள்
ஒரு தாளை எடுங்கள், உங்கள் அமைதி கெட்டதற்குரிய காரணங்களை வரிசைப்படுத்துங்கள். அமைதியாக இருந்த நாட்களை எண்ணிப் பாருங்கள். அதற்குப் பிறகு எப்போதிலிருந்து, எப்படி அமைதி கெட்டது என்பதற்குரிய காரணங்களை கண்டறியுங்கள். வரிசைப்படுத்துங்கள்.

அமைதியை வளர்த்துக் கொள்ள சில விதி முறைகள்.

1. நல்ல பழக்க வழக்கங்கள்.
முறையான பழக்க வழக்கங்கள் அமைதியை நல்கும். நமது முறையான பழக்க, வழக்கங்களே – அதிகாலையில் எழுதல், குளித்துவிட்டுப் பணிகளுக்குச் செல்லல் போன்ற சிறு சிறு செயல்கள்தாம் நம் குழந்தைகளின் நல்ல பழக்கத்திற்கு நிரந்தர பாடமாக அமைகின்றன.

2. நேர்மையாக நடந்துகொள்ளுதல்
முடிவதை முடியும் என்றும் முடியாத்தை மறுத்துவிடுதலும் அப்போதைக்குச் சிரமாக இருந்தாலும் நாளடைவில் மன அமைதி கிட்டும். இல்லாவிடின் மன அமைதி கெட்டுவிடும். முறை தவறி, தாட்சண்யம் கருதிச் செய்வதால் பலர் துன்பத்திற்கு ஆளாகி மன அமைதியை இழந்து விடுகின்றனர்.

நல்ல நண்பர்கள் சேர்க்கை
நல்ல நண்பர்களைப் பெற்றிருப்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பெரும் பேறாகும். நல்ல நண்பர்கள் இருக்கும்போது தீய சிந்தனைக்கோ, தீய பேச்சுக்களுக்கோ இடமில்லை. தீமையில்லாதபோது அமைதி நிலைபெறுகிறது. நல்ல நூல்களும் மன அமைதிக்கு வழி வகுக்கிறது.

மன்னிக்கும் மனப்பான்மை
பிறர் செய்யும் சில குறைகளை – பொறுத்துக் கொள்ளவும் – சில குறைகளை மன்னிக்கவும் – சிலவற்றை முழுமையாக மறந்து விடவும் கற்றுக் கொள்வதால் பலரது அமைதி பாதுகாக்கப்படுகிறது.

தியானம்
தியானப் பயிற்சியால் மனம் கட்டுப்படுத்தப்பட்டு அமைதி காக்கப்படுகிறது; தியானப் பயிற்சி – முறையாக – நீண்ட நாள் – தொடர்ந்து செய்தால் அன்றிப் பயன் நல்காது. ஈடுபாடு இல்லாத தியானத்தாலும் பயனில்லை.

இறையருள்
சில வகையான துன்பங்கள் – விரைவில் தீர்க்கமுடியாத – ஊனங்கள் அவமானங்கள் – மன அமைதியைக் கெடுத்து விடுவதுண்டு. அத்தகைய சூழலில் இறையருளை எண்ணி நமது கடமையைச் செவ்வனே ஆற்றுவதே மன அமைதிக்குச் சிறந்த வழியாகும். அறிவுக்கும் அப்பாற்பட்டு – காரணம் காணவே முடியாத சில துன்பங்களுக்கு இறையருள்தான் வழிகாட்ட வேண்டும். அந்த நம்பிகையோடு செயல்படுவதுதான் மன அமைதிக்கு சிறந்த வழியாகும்.

ஈடு செய்தல்
நாம் அறிந்தோ அறியாமலோ சில தவறுகளைச் செய்து இருப்போம். அதற்குப் பிராயச்சித்தமாக – அதற்கு ஈடுசெய்யும் வகையில் – இசல நன்மைகளைச் செய்யும்போது நமக்கு மன அமைதி ஏற்படுகின்றது.
இது ஒரு வகை. மற்றொரு வகை நாம் செய்யாத ஒரு தவறுக்காக தண்டனை ஏற்க வேண்டிவரும். அப்போது, நமக்கு இப்போது ஏற்பட்டுள்ள துன்பம் ஏற்கனவே செய்த தவறுக்கு உரியது என்று சமநிலைப்படுத்திக்கொண்டால் அமைதியை இழக்க நேரிடாது.

மன அமைதியும் மன உறுதியும்
மன அமைதியும் மன உறுதியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மனதை அமைதியாக வைத்திருப்பவர்கள் எந்தக் காரியத்திலும் மன உறுதியுடன் இருப்பார்கள். அதேபோல் மன உறுதியுடன் இருப்பர்கள் ஒருபோதும் மன அமைதியை இழக்கமாட்டார்கள்.
மாறாக ஒன்றை இழந்தால் மற்றொன்றையும் இழந்துவிட நேரிடும், ஆகவே ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக விளங்கும் இரண்டையும் ஒரு சேரப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.

இந்த இரண்டு தன்மைகளையும் பாதுகாக்கவும் வளர்த்துக்கொள்ளவும் எவ்வித முதலீடு தேவை இல்லை. பொருட் செலவும் செய்ய வேண்டுவதில்லை. உணர்ச்சி பூர்வமாக இருப்பதை விடுத்து அறிவு பூர்வமாகச் சிந்தித்து நம்மை நாமே சரிசெய்துகொள்வதுதான் நாம் செய்ய வேண்டிய செயலாகும்.

சிலரைப் பாருங்கள். எப்போதும் சிரித்த முகத்துடனேயே செயலாற்றுவார்கள். அவர்களுக்கு நம்மைக் காட்டிலும் அதிகமாப் பொருளாதாரப் பிரச்னைகள், தீர்க்கமுடியாத குடும்ப பிரச்சினைகள். பல்வேறு வெளி விவகாரங்கள் என்று பல இருக்கும்.

அவற்றை அவர்கள் அணுகும் முறை – அவற்றைக் கையாளும்முறை – அவற்றைச் சீரணிக்கும் முறை – அவற்றை ஏற்றுக்கொள்ளும் முறை இவற்றை உற்றுக் கவனித்தால் – உண்மை விளங்கும். நாம் எந்த அளவுக்கு – இந்த அணுகு முறைகளில் குறைபாடு உடையவர்களாக இருக்கிறோம் என்பது விளங்கும்.



மேலும் ......
-> நல்ல இசை கேளுங்கள் ...
-> நிறைய புத்தகங்களை படிக்கவும் ..
-> நண்பர்களுடன் பேசுங்கள் ....
-> புது புது நண்பர்களை உருவாக்கி கொள்ளுங்கள் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக