பக்கங்கள் (Pages)

சனி, 26 ஏப்ரல், 2014

மாணவர்களுக்காக கோடை காலப் பயிற்சிகள்

கோடை விடுமுறையை பயனுள்ளதாகக் கழிக்க பள்ளி மாணவர்களுக்காக சென்னையில் நடைபெறும் கோடை காலப் பயிற்சிகள் குறித்த சிறிய அறிமுகம்...

பொதுத் தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியிருக்கும் நேரம் இது. இந்தக் கோடை விடுமுறையை பயனுள்ளதாகக் கழிக்கும் வகையில், ஏராளமான கோடைகாலப் பயிற்சி முகாம்கள் சென்னை நகரெங்கும் நடைபெறுகின்றன. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் இக்காலத்தில், குழந்தைகளை தனியே வீட்டில் விட்டுவிட்டுச் செல்வதைவிட, இதுபோன்ற கோடைகாலப் பயிற்சி முகாம்களில் சேர்த்துவிடுவதே நல்லது என்று கருதுகிறார்கள். இந்த முகாம்களின் மூலம் புதிய விஷயங்களை குழந்தைகள் கற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், பள்ளிப் பாடங்களிலிருந்து விடுபட்டு, வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை அறிவையும் பெற முடிகிறது. இனி, பள்ளி மாணவர்களுக்கான கோடை காலப் பயிற்சிகள் பற்றிய தகவல்கள்...


இயற்கைப் பயண முகாம்

நகர்ப்புற நெருக்கடியிலிருந்து சற்றே விலகி, இந்தக் கோடையை உல்லாசமாகக் கொண்டாட விரும்புபவர்களுக்கென்றே சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த இம்ப்ரஸ்ஸாரியோ டிராவல்ஸ் நிறுவனம் மாணவர்களுக்கான கோடை கால முகாமை நடத்துகிறது. ‘நேச்சர் கேம்ப்’ எனப்படும் இந்த முகாமில் பங்கேற்கும் மாணவர்களை இயற்கையான வனப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்கிறது.



பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான இயற்கைச் சுற்றுலாக்கள், கல்விச் சுற்றுலாக்களை ஏற்படுத்தித் தரும் பணியை நாங்கள் பல்லாண்டுகளாகச் செய்து வருகிறோம். 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இந்த இயற்கைச் சுற்றுலாவில் பங்கேற்கலாம். பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கொடைக்கானல் அருகே வனப்பகுதிக்கு இயற்கைச் சுற்றுலா அழைத்துச் செல்கிறோம். வழக்கமான சுற்றுலாவைப் போல அல்லாமல், வனங்களிலேயே தங்கியிருந்து, கானுயிர்களை ரசித்தல், மலையேற்றப் பயிற்சி என்று முற்றிலும் இயற்கையோடு இணைந்த சுற்றுலாவாக இது வடிவமைக்கப்பட்டள்ளது.

3 இரவுகள், 4 பகல் என்று நான்கு நாட்கள் இந்தச் சுற்றுலா இருக்கும். வனத்திலேயே டெண்ட் அடித்துத் தங்குவோம். அதிகாலையிலிருந்து மதியம் வரை மலையேற்றம் போன்ற பயிற்சிகளும், மதியத்துக்கு மேல் விளையாட்டு, தகவல் பரிமாற்றம், தலைமைப் பண்புப் பயிற்சி போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படும். ஒரு முகாமுக்கு 30 மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். எங்களுடன் பயிற்சி பெற்ற ஆசிரியர்களும், நிபுணர்களும் பயணிக்கிறார்கள். தமிழகம் முழுவதிலுமிருந்து வரும் மாணவர்கள் திண்டுக்கல்லில் ஒன்று சேர்கிறார்கள். அங்கிருந்து நேச்சர் கேம்ப் தொடங்குகிறது. பலதரப்பட்ட மாணவர்களும் ஒன்றாகத் தங்கியிருந்து, கலந்து பழகி, விட்டுக்கொடுத்து, இணக்கமாக வாழும் நெறியைக் கற்றுக்கொள்கிறார்கள். மாணவர்கள், மாணவிகளுக்கு தனித் தனி தங்கும் வசதியும், ஆண், பெண் ஆசிரியர்களும் உள்ளனர். சுவையான சைவ உணவு (பஃபே முறைப்படி) வழங்கப்படும். இந்த முகாமுக்கான கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ.5,500" என்று உற்சாகமாக விவரிக்கிறார் முகாம் ஏற்பாட்டாளர் மீனாட்சி சுந்தரம்.

விவரங்களுக்கு: 94440 03440



மென்டல் மேத்ஸ், ஸ்டோரி டெல்லிங்

3 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக மனக் கணக்குப் பயிற்சி, கதை சொல்லுதல், வாசிப்பு, எழுத்துப் பயிற்சிகளை அளிக்கிறது ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த் கிரியேட்டிவ் மைண்ட் அமைப்பு. எம்.பி. ஆனந்த் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்த பயிற்சி, மூன்று வாரங்களுக்கானது. நமது வசதிக்கேற்றபடி காலையிலோ அல்லது மதியமோ கலந்து கொள்ளலாம். மே 30-ஆம் தேதி வரை மூன்று பகுதிகளாகப் பயிற்சியளிக்கிறோம். மூன்று முதல் ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எழுத்துப் பயிற்சி, வாசிப்புப் பயிற்சி, கதை சொல்லுதல், மனக் கணக்கு, அடிப்படை அறிவியலை விளையாட்டுப் போல கற்பித்தல், களிமண்ணால் கலைப் பொருட்கள் செய்தல், இசை போன்றவற்றை கற்றுக்கொடுக்கிறோம். எட்டு முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தஞ்சாவூர் ஓவியம், மேடைப் பேச்சு, தலைமைப் பண்புப் பயிற்சி, ஹிந்தி மற்றும் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, வீணை இசைப் பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சிகளை அளிக்கிறோம். பயிற்சிக் கட்டணம் ரூ.3,000. இதில் ஓவியம் போன்ற பயிற்சிகளுக்கான உபகரணங்களும் அடங்கும். குழுவாக நிறையப் பேர் வந்து சேர்ந்தால் கட்டணத் தொகையில் 10 முதல் 15 சதவீதம் வரை தள்ளுபடியும் உள்ளது. பள்ளிகள் திறந்தபிறகும் மாணவர்கள் விரும்பினால் இந்தப் பயிற்சி வகுப்புகளில் தொடர்ந்து பயிற்சி பெறலாம்" என்கிறார் இந்த மையத்தின் முதல்வர் அமுதா ஆனந்த்.

விவரங்களுக்கு: 9840479745, 9840240233



கிரிக்கெட் பயிற்சி

கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு முறைப்படி கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறது விருகம்பாக்கத்திலுள்ள ஏவிஎம் கிரிக்கெட் அகாதெமி. வார நாட்களில் தினசரி பயிற்சி நடந்தாலும்கூட, கோடை விடுமுறை பயிற்சி வகுப்பில்தான் நிறைய மாணவர்கள் பயிற்சிக்கு சேர்கிறார்கள். எங்கள் அகாதெமியிலிருந்து 1500-க்கும் மேற்பட்ட இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கியிருக்கிறோம். 14-15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். ஏப்ரல், மே மாதம் நடைபெறும் கோடை காலப் பயிற்சி வகுப்பில் கிரிக்கெட் விளையாட்டின் நுணுக்கங்கள், விளையாட்டு வீரர்களுக்கு இருக்க வேண்டிய குழு மனப்பான்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு, போட்டிகளில் பங்கேற்கும்போது கடைபிடிக்க வேண்டிய நுணுக்கங்கள் என்று அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறோம். குறைந்தபட்சம் 10 போட்டிகளை நடத்தி, அவர்களின் திறமையை வெளிக்காட்ட உதவுகிறோம். கட்டணம் ரூ.2,800. பேட் போன்ற பயிற்சி உபகரணங்களை மாணவர்களே கொண்டு வரவேண்டும்" என்கிறார் ஏவிஎம் அகாதெமியின் இயக்குநர் எம்.கே. இக்பால்.

விவரங்களுக்கு: 9840556215



குறும்படம் தயாரித்தல், தற்காப்புக் கலை

குறும்படம் தயாரிப்பதற்கும், பெண்களுக்கான தற்காப்புக் கலையை கற்றுக் கொடுக்கவும் இந்தக் கோடை விடுமுறையில் பயிற்சி அளிக்கிறது விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பிரேரனா ஈவண்ட்ஸ் மற்றும் மந்த்ரா ஈவண்ட்ஸ் அமைப்புகள். மூன்று வகையான பயிற்சிகளை இந்தக் கோடை விடுமுறையில் நடத்தவுள்ளோம். 5 முதல் 8 வயது வரையான குழந்தைகளுக்கான பயிற்சியில் ஓவியம், இசை, விளையாட்டு போன்றவை இடம்பெறும். 10 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு குறும்படம் தயாரிக்கப் பயிற்சியளிக்கிறோம். இதற்கென நிபுணர்களை வரவழைத்து முறைப்படி கற்றுத் தருகிறோம். அடுத்து, 8 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கென தற்காப்புக்கலைப் பயிற்சியை அளிக்கவுள்ளோம். இதில் கராத்தே, யோகா போன்றவையும் அடங்கும். ஒவ்வொரு பயிற்சியும் 10 நாட்கள் நடைபெறும். குறும்படப் பயிற்சிக்கு கட்டணம் ரூ.2,500. தற்காப்புக் கலைக்கு ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை. குழந்தைகளுக்கான பயிற்சிக்கு ரூ.1,000. இந்தப் பயிற்சிகளைப் பெறும் மாணவர்களுக்கு எத்துறையில் ஆர்வம் உள்ளது என்பதை நாங்கள் கண்டறிந்து, அதைத் தொடர்ந்து பெறும்படி பெற்றோரிடம் பரிந்துரைக்கிறோம்" என்கிறார் இந்தப் பயிற்சிகளின் அமைப்பாளர் அனுராதா.
விவரங்களுக்கு: 9962085212

பத்திரிகைத் துறை
பத்திரிகைத் துறையில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்ட மாணவர்கள் நிருபர்களாகவும், செய்தி சேகரிப்பாளர்களாகவும் பணியாற்ற வாய்ப்பு அளிக்கிறது ஆற்காடு ரோடு டைம்ஸ் இதழ். 9 மற்றும் 10-ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்கள் பத்திரிகையாளர்களாகப் பணியாற்ற பயிற்சி பெறலாம். வகுப்பறைப் பயிற்சியாக இல்லாமல், களமிறங்கி செய்திகளைச் சேகரித்து வரவேண்டியிருக்கும். அதற்குரிய ஆலோசனைகளும், தகவல்களும் மாணவர்களுக்கு வழங்கப்படும். செய்தி சேகரிக்கும் முறை, பேட்டி காணும் விதம் குறித்தெல்லாம் சொல்லித் தரப்படும். மாணவர்கள் அளிக்கும் செய்தியின் அடிப்படையில் அவர்கள் நிரந்தரமாகத் தொடர்ந்து செய்தி சேகரிப்பாளர்களாகப் பணியாற்றும் வாய்ப்புப் பெறலாம். இதற்கான கட்டணம் ரூ.500.

தொடர்புக்கு: 044 - 23764320 (மாலை 4 முதல் 9 வரை).


அறிவியல் பரிசோதனை

அறிவியலில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்காக அறிவியல் பரிசோதனைப் பயிற்சிகளை அளிக்கிறது க்யூரியோ கிட்ஸ் அமைப்பு. நுங்கம்பாக்கம், சாலிக்கிராமம், வேளச்சேரி, தி.நகர், கே.கே.நகர், ராமாபுரம், கீழ்ப்பாக்கம் போன்ற இடங்களில் இந்த வகுப்புகள் நடைபெறுகின்றன. கோடை விடுமுறையை முன்னிட்டு 6 முதல் 8 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஒரு பிரிவாகவும், 9 முதல் 13 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஒரு பிரிவாகவும் பயிற்சியளிக்கப்படுகிறது. குழந்தைகள் தாங்களாகவே நேரடியாக, சுதந்திரமாக அறிவியல் பரிசோதனைகளை செய்து பார்க்க முடியும். இத்துறை நிபுணர்கள் அவர்களுக்கு வழிகாட்டுவார்கள். உதாரணமாக, மின்சாரத்தால் பொருட்கள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை பரிசோதனை மூலம் குழந்தைகள் உணர்ந்துகொள்ள முடியும். தாங்கள் செய்ததை வீட்டிற்கும் எடுத்துச் செல்லலாம். 5 நாட்களுக்கான பயிற்சி முகாமுக்கு கட்டணம் ரூ.1,800 முதல் ரூ.2,500. இதில் அறிவியல் பரிசோதனைகளுக்கான உபகரணங்களும் அடங்கும். ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் மே 9-ஆம் தேதி வரை முகாம் நடக்கிறது. தங்களுக்குப் பொருத்தமான தேதியை மாணவர்கள் தேர்ந்தெடுத்து பயிற்சியில் சேரலாம். இத்துறையில் பல்லாண்டுகள் அனுபவம் வாந்த ஆசிரியை நாகலட்சுமி குழுவினர் இந்த வகுப்புகளை நடத்துவார்கள்" என்கிறார் இந்த அமைப்பைச் சேர்ந்த கல்பனா.

இவரது தொடர்புக்கு: 9962166650, 9789854247.



இலவச கம்ப்யூட்டர், ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி

பிளஸ் டூ படித்த (தேர்வு எழுதிய) மாணவர்களுக்காக சென்னை திருநின்றவூர் அருகேயுள்ள கசுவா கிராமத்தில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சியும், ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியும் நடைபெறவுள்ளது. சேவாலயா தொண்டு நிறுவனம் இந்தப் பயிற்சிகளை நடத்தவுள்ளது. ஸ்கோப் இன்டர்நேஷனல் நிறுவனத்தைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினீயர்கள் இந்தப் பயிற்சியை அளிக்கவுள்ளனர். ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை பயிற்சி நடைபெறும். பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த 150 மாணவர்கள் இந்தப் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பிளஸ் டூ முடித்துவிட்டு, என்ஜினீயரிங் போன்ற உயர் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சும், கம்ப்யூட்டர் அறிவும் அவசியம். அந்த மாணவர்களுக்கு உதவும் நோக்கில்தான் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது" என்கிறார் சேவாலயா அமைப்பின் நிறுவனர் முரளிதரன்.

விவரங்களுக்கு: 9444793505



தையல் பயிற்சி

10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ படித்த மாணவிகளுக்காக கோடை கால தையல் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்மார்ட் ஸ்கில்ஸ் தையல் பயிற்சிப் பள்ளி. 10 நாட்கள், 15 நாட்கள், ஒரு மாதம் என்று குறுகியக் கால தையல் பயிற்சிகளை நடத்துகிறோம். பிளவுஸ், கவுன், சுடிதார், ஜூட் பேக், பெட்டிகோட், மெஷின் எம்பிராடரி, குஷன் கவர், ஜர்தோஷி வேலைப்பாடுகள் போன்ற அனைத்து வகையான தையல் பயிற்சிகளையும் கொடுக்கிறோம். மாணவிகள் தங்களுக்குத் தேவையான வகுப்பில், வேண்டிய நேரத்தில் கலந்துகொண்டு பயிற்சி பெறலாம். குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு கட்டணத்தில் சலுகையும் உள்ளது. கோடைகாலப் பயிற்சி மட்டுமல்லாமல், மற்ற நாட்களிலும் பயிற்சி அளிக்கிறோம்" என்கிறார் இப்பயிற்சி மையத்தைச் சேர்ந்த ரஹ்மத்.

விவரங்களுக்கு: 9092041560



நடனம், சமையல், வன உயிரியல் ஆவணப்படம் தயாரித்தல்

3 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நடனம், சமையல் போன்ற பலவிதமான பயிற்சிகளை கோடைகாலப் பயிற்சியாக அளித்து வருகிறது சென்னை ராஜா அண்ணாமலை புரத்தைச் சேர்ந்த வெண்ணிலா சில்ட்ரன் பிளேஸ் அமைப்பு. 3 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஃப்ரீ ஸ்டைல் நடனம், இசை ஒர்க்‌ஷாப் போன்றவற்றை நடத்துகிறோம். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சமையல் வகுப்பு நடத்துகிறோம். இதில் பாஸ்தாவைப் பயன்படுத்தி சமைப்பது, இனிப்பு வகைகள் செய்வது என்று அந்த வயதுக்கேற்ற பலகாரங்களைச் செய்யச் சொல்லிக் கொடுக்கிறோம். 6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அறிவியல், கணிதம் போன்றவற்றில் ஒர்க்‌ஷாப்பும், தச்சுப் பயிற்சி வகுப்பும் நடத்துகிறோம். அத்துடன் காட்டு உயிரினங்கள் பற்றிய ஆவணப்படம் தயாரிக்கவும், ஸ்கிரிப்ட் எழுதவும் பயிற்சி அளிக்கிறோம். ஒரு நாள் மட்டுமே உள்ள பயிற்சிகளிலிருந்து ஒரு வாரம் வரையிலான பயிற்சிகளும் உள்ளன. அதற்கேற்ப ரூ.750 முதல் ரூ.3,500 வரை கட்டணம் நிர்ணயித்துள்ளோம். ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்குகின்றன" என்கிறார் இந்த அமைப்பின் இயக்குநர் ஸ்ரீலேகா.

விவரங்களுக்கு: 044-42066660



ஸ்போர்ட்ஸ் கேம்ப்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிலுள்ள (சென்னையிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரம்) வேலம்மாள் சர்வதேசப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வேலம்மாள் நாலெட்ஜ் பார்க் சார்பில் கோடைகால ஸ்போர்ட்ஸ் கேம்ப் நடைபெறவுள்ளது. ஸ்கேட்டிங், நீச்சல், டென்னிஸ், கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன், கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து போன்ற விளையாட்டுக்களில் பிரத்யேகப் பயிற்சியளிக்கப்படுகின்றது. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுத்து பயிற்சி பெறலாம். 10 நாட்கள் நடைபெறும் முகாமில், மாணவர்கள் இந்த வளாகத்திலேயே தங்கியிருந்து பயிற்சி பெறவேண்டும். மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் விளையாட்டு மட்டுமல்லாமல், இசை, ஃபைன் ஆர்ட்ஸ், கிராப்ட்ஸ், நடனம், மேடைப் பேச்சு, ரோபோட்டிக்ஸ், அனிமேஷன் போன்றவற்றிலும் அவர்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறும். காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மாணவர்களின் தினசரி நடவடிக்கைகள் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

சுகாதாரமான உணவு, தங்குமிடம் போன்றவற்றையும் அளிக்கிறோம். ஸ்கேட்டிங், நீச்சல், டென்னிஸ், கிரிக்கெட், பாட்மிண்டன் போன்ற விளையாட்டுப் பயிற்சிகளுக்கு ஒரு பயிற்சிக்கு ரூ.5,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து, டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுப் பயிற்சிகளில் ஒரு பயிற்சிக்கான கட்டணம் ரூ.2,000. மாணவர்களுக்கான தங்குமிடம், உணவு போன்ற அனைத்தும் இந்தக் கட்டணத்தில் அடங்கும். தகுதியான பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும். ஏப்ரல் 18-ஆம் தேதியிலிருந்து 27-ஆம் தேதி வரை ஒரு முகாமும், மே 2-ஆம் தேதியிலிருந்து மே 11-ஆம் தேதி வரை மற்றொரு முகாமும் நடைபெறும்" என்கிறார் முகாம் ஒருங்கிணைப்பாளர்.

விவரங்களுக்கு: 9159705557, 7299067906, 8791290862



ரோபோட்டிக்ஸ்

பள்ளி மாணவர்கள் மத்தியில் ரோபோட்டிக்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களைக் கொண்டே ரோபோவை உருவாக்கவும் கோடைகாலப் பயிற்சியளிக்கிறது சென்னையைச் சேர்ந்த ஐவிஸ் ஆன்ட்ராய்டு ரோபோ நிறுவனம். சென்னையில் அசோக் நகர் மற்றும் தி.நகர் ஆகிய இரண்டு இடங்களில் எங்களின் பயிற்சி மையங்கள் உள்ளன. மாணவர்கள் எதில் வேண்டுமானாலும் சேரலாம். 7 வயது முதல் கல்லூரி வயது வரையான மாணவர்கள் யார் வேண்டுமானாலும் இப்பயிற்சியில் சேர முடியும். 10 நாட்கள் நடைபெறும் பயிற்சிக்கான கட்டணம் ரூ.3,000. பயிற்சிக்கான உபகரணங்களையும் நாங்களே வழங்குகிறோம். ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வீதம் மொத்தம் 40 மணி நேரம் பயிற்சி இருக்கும். முகாமில் 8 ரோபோக்களை வடிவமைக்கப் பயிற்சி தருவோம். 7 ரோபோக்களை நாங்கள் கொடுக்கும் புரோகிராம்கள், பயிற்சிகளைக் கொண்டு உருவாக்க வேண்டும். 8-ஆவது ரோபோவை மாணவர்களே தங்கள் சொந்த முயற்சியால் உருவாக்கும் வகையில் பயிற்சியளிப்போம். இந்தப் பயிற்சியினால் மாணவர்களின் படைப்பாக்க சிந்தனை அதிகரிக்கும், ரோபோட்டிக்ஸ் குறித்த அறிவு மேம்படும். ஏற்கெனவே எங்கள் நிறுவனம் ஒரு சில பள்ளிகளுடன் இணைந்து மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ் பயிற்சி அளித்து வருகிறது. கோடைகாலப் பயிற்சியின் மூலம் மேலும் பல மாணவர்கள் இப்பயிற்சியைப் பெற முடியும். பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்குகிறோம்" என்கிறார் ரோபோட்டிக்ஸ் பயிற்சியாளர் கிங்ஸ்லி.

விவரங்களுக்கு: 9551277111, 9551077222


                                                         ----------------    புதியதலைமுறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக