இன்றைக்கு வியந்துபார்க்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது அறிவியல் உலகம். நாள்தோறும் புதுப்புது கண்டுபிடிப்புகள் பூமியில் பிரசவிக்கின்றன. ஆனால் இன்றோடு ஒப்பிடுகையில், ஆரம்பகாலங்களில் அறிவியல் அறிஞர்களும், விஞ்ஞானிகளும் அளித்த அறிவியல் பங்களிப்புகள் மகத்தானது.
தங்களது கருத்தை வெளியிட்டால், கழுத்தை நெறிக்கும் மதநம்பிக்கைகள், மதவாதிகள் நிறைந்த சமூகம், புதிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத சமூகத்தில் விதிக்கப்படும் மரணதண்டனைகள், கசையடிகள் என எத்தனையோ பேர், தடைகளைத் தகர்த்து அறிவியல் உலகிற்கு தங்கள் வாழ்வை தியாகம் செய்திருக்கின்றனர். அவர்களில் முக்கியமானவர் இத்தாலியை சேர்ந்த விஞ்ஞானி கலிலியோ கலிலி. மதநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை கூறுவதற்கு தண்டனை விதிக்கப்பட்டு, காலம் முழுக்க துயருற்ற மாபெரும் சகாப்தம் கலிலியோ. அவருக்கு முன்பு கூறப்பட்டிருந்த எத்தனையோ பொய்யான கோட்பாடுகளை, தகுந்த ஆதாரங்கள் மூலம் தவிடுபொடியாக்கியவர். அப்படி அவர் 15-ம் நூற்றாண்டில் பொய் எனக்கூறிய முக்கியமான கோட்பாடு, பொருட்களின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசை பற்றியது. இதனைப் பற்றிய தெளிவான விளக்கம் அளித்தாலும், அதனை துல்லியமாக நிரூபிக்க, போதுமான வசதிகள் அன்று இல்லை. மிக எளிமையான கோட்பாடு இது. அதைத்தான் தற்போது நவீன சோதனைகள் மூலம் உண்மை என நிரூபித்திருக்கின்றனர். அது என்ன?
அறிஞர் அரிஸ்டாட்டில் அளித்திருந்த விளக்கங்கள் எல்லாம் 15-ம் நூற்றாண்டில் புனிதநூல் போன்றவை. எந்தவித கேள்விகளும் இன்றி அரிஸ்டாட்டிலின் கோட்பாடுகளை அப்படியே நம்பிக்கொண்டிருந்தனர் மக்கள். அதில் பலவற்றை தகுந்த ஆதாரங்களுடன் பொய் என நிரூபித்தார் கலிலியோ. பொருட்களின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசை பற்றிய அரிஸ்டாட்டிலின் விளக்கம், “இரண்டு பொருட்களை சம தூரத்தில் இருந்து கீழே போட்டால், எடை அதிகமான பொருளானது முதலில் தரையை வந்தடையும்” என இருந்தது. இதை மறுத்தார் கலிலியோ. “இருவேறு எடை கொண்ட பொருட்களை சமதூரத்தில் இருந்து கீழே போட்டால், இரண்டு பொருட்களுமே ஒரே நேரத்தில்தான் தரையை வந்தடையும். அதன் மீது செயல்படும் முடுக்கம் (acceleration) ஒரே மாதிரிதான் இருக்கும்” என விளக்கம் அளித்தார் கலிலியோ. இதனை விளக்கத்தோடு நிறுத்தாமல் பைசா நகரின் சாய்ந்த கோபுரம் மீது ஏறி நின்று சோதித்து 1589-ம் ஆண்டு நிரூபித்தார். பைசா கோபுரம் மீது நின்றுகொண்டு, இரண்டு சமமற்ற எடைகளைக்கொண்ட இரும்பு குண்டுகளை கீழே போட்டார். இரண்டுமே ஒரே நேரத்தில் தரையை வந்தடைந்தது. அரிஸ்டாட்டில் கூற்று தவறு என இத்தாலி மாணவர்களுக்கு புரியவைத்தார் கலிலியோ.